Showing posts with label sudhagar. Show all posts
Showing posts with label sudhagar. Show all posts

நான் அரக்கன்!



கடவுள் தன்மை அற்றவன் அரக்கன்


எதிரியை மறைந்து நின்று கொல்லும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

துணைவியை சந்தேகம் கொள்ளும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

சூழ்ச்சியால் சமர் வெல்லும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

தவம் செய்பவனுக்கு மட்டும் வரம் என்ற
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

கள்ளும் சுருட்டும் கேட்கும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

ஆயிரம் பெண்களுடன் ஒரே நேரத்தில் கூத்தடிக்கும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

கேட்பவருக்கு மட்டும் உதவும்
சித்தத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

இத்தனைக்குப் பிறகும் இறைவனை நம்பும் நான்
அரக்கனே!

இரயில் பெண்!



அன்றொரு நாள்
கோவை விரைவுத் தொடர்வண்டியில்
எப்போதும் வாயிலின் படியில்
அமர்ந்து பயணிக்கும் நான்
அன்று பெட்டியின் நடுவில்
அவளின் விழியீர்ப்பு மையத்தில்
பிரம்மனும் தோற்றிடும் படைப்பு
பார்க்கும் பொழுதெல்லாம் செல்லரிப்பு
அவள் நாலைந்து முறை தவறுதலாக‌
சில் மைக்ரோ விநாடிகள் எனைப் பார்த்தாள்
நான் ஒரு nano விநாடியும்
தவறாமல் அவளைப் பார்த்திருந்தேன்
அது மானைப் பார்க்கும் புலியின் பார்வையல்ல‌
ஒரு பூவைப் பார்க்கும் பட்டாம்பூச்சியின் பார்வை
ஏழு மணிநேரம் கழிந்தது
நானிறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது
என்னை இறக்கி விட்டு விட்டு
கேலியாய் சங்கூதிச் சென்றது ரயில்
அவளோடு என் இத‌யத்தையும் சுமந்து......

மீள்சந்திப்பு




மழை நின்ற பிறகும்
நிலைத்திருக்கும் ஈரமாய்
பிரிந்த பிறகும் நமது......

End of the every rain
Gives happy of its pleasure
Leaves longing for next arrival
Like.... US.....

ஞான‌ப்பாட‌ல்!





§ எனக்கு வயது 15 இருக்கும் அது நான் 10ம் வகுப்பு படித்து வந்த நேரம். எனது தந்தை தனது ஊதியத்தில் பெரும் பாகத்தை புத்தகங்கள் வாங்கி தருவதிலேயே அதிகம் செலவிடுவார். அப்படி ஒரு நாள் எனக்கு அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுப்பு தான் கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்".

§ கவியரசரை பழைய திரைப்படங்களில் பாடல் எழுதியவர் என்று மட்டுமே அறிந்து இருந்த எனக்கு "அர்த்தமுள்ள இந்து மதம்" படித்ததும் வியப்பு. வாழ்வின் அனைத்து மூலைகளையும் அனுபவித்தவர் அவர் என்பதை அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஒவ்வொரு எழுத்துக்களும் சுட்டிக்காட்டின.


§ கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஐந்தாம் பாகம் "ஞானம் பிறந்த கதை" படித்த பொழுது தான் சைவ கோவில்களில் கரும்புடன் நின்றிருந்த பட்டினத்தாரின் பெருமை அறிந்தேன். ஆனால் அந்த வயது அவரைப் பற்றி ஓரளவே தெரிந்துகொள்ள செய்தது.


§ கால‌ம் தன் சிற‌கை யாருக்காக‌வும் மெதுவாக‌ அசைப்ப‌தில்லை. +2 முடித்து இள‌ங்க‌லை பொறியிய‌ல் சேர்ந்தேன்.... அது முடித்த‌வுட‌ன் முதுக‌லை பொறியிய‌ல். ப‌டித்த‌வுட‌ன் தொலைதொட‌ர்பு துறையில் ப‌ணி பணியில் சேருவ‌த‌ற்கான‌ நிய‌ம‌ன‌ ஆணை இன்னும் கிடைக்க‌ப் பெறாமையால் க‌ட‌ந்த‌ கால‌த்தினை அசைபோடும் பொழுது, ஒருநாள் இணைய்த்திலே வ‌ல‌ம் வ‌ரும் நேரம் என‌து வ‌குப்ப‌றை ஆசான் ம‌திப்பிற்குரிய‌ சுப்பையா அவர்க‌ளின் http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5939.html ப‌க்க‌த்தினுள் நுழைய நேரிட்ட‌து.மீண்டும் என்னுள் உயிர் பெற்ற‌து ப‌ட்டின‌த்தாரைப் ப‌ற்றி அறிந்து கொள்ளும் ஆர்வ‌ம்.


§ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ப‌ட்டின‌த்தாரின் பாட‌ல்க‌ளை உங்க‌ளுட‌ன் சேர்த்து நானும் சுவைக்க‌ இந்த‌ வ‌லைப்ப‌க்க‌த்தினை ப‌ய‌ன்ப்டுத்த‌ விழைகிறேன். துவ‌க்க‌மாக‌ நான் முத‌ன் முதல் ப‌டித்த‌ ப‌ட்டின‌த்தார் பாட்டு



"நாப் பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல‌
அகப்ப்ட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!"



§ நான் அந்த வயதில் இந்த பாட்டினை ரசிக்க காரணம் கடையிரு வரிகள்... பிறகு காலம் செல்ல செல்ல தான் மற்ற அடிகளின் பொருளை அறிந்தேன் (இன்னும் உணரவில்லை :-)) ஒரு அற்புத‌ பாட‌லுட‌ன் மீண்டும் ச‌ந்திப்போம்,........

அருட்பெருஞ்சோதி வள்ளலார்


இன்று அக்டோபர் 5‍ ந் தேதி, அருட்பெருஞ்சோதி வள்ளலார் பிறந்த நாள். 1823 ம் ஆண்டு இதே நாள் அதாவது சுபானு ஆண்டு புரட்டாசி மாதம் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சித்தரை நட்சத்திரம் 4 ம் பாதத்தில் மாலை 5:54 மணிக்கு பிறந்தார் வள்ளலார் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ராமலிங்கம்...  
வள்ளலார் தனது கையெழுத்தைப் போடும்போதெல்லாம் சிதம்பரம் ராமலிங்கம் என்றே கையெழுத்திடுவார். ஆன்மாவின் இருப்பிடம் ஆகாய பெருவெளியாகிய சிதம்பரம் என்னும் வெட்ட வெளி என்பதை ஞானத்தால் உணர்ந்தே அவர் கையெழுத்துப் போட்டுள்ளார். அவர் 5 மாத குழந்தையாக இருந்தபோதே சிதம்பர ரகசியத்தை இறைவன் வெட்ட வெளியாகக்காட்டினான் என்பதை அவர் பாடல்கள் மூலம் விளக்கி உள்ளார்.  
வள்ளலார் சுத்த தேகம்,பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் 3 வகை தேகசித்தியைப் பெற்றவர். தேக சித்தி பெற்ற உடம்புகள் நிலத்தில் வீழாது அவை வெளியாய் அருளில் கலக்கும். அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இந்த பிறவியில் பெற்றதே இறுதி தேகம். அப்படி நித்திய தேகம் பெற்ற வள்ளலார் 1874 சனவரி 30 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சித்தி வளாக மாளிகையில் உள்ள தனது அறையில் சோதியுடன் கலந்து அருட்பெருஞ்சோதியானார். 

அவரது சமரச சுத்த சன்மார்க கொள்கைகளுள் சில,  
* கடவுள் ஒருவரே, அவரை உண்மை அன்பால் ஒளிவடிவில் வழிபட வேண்டும்.  
* சிறு தெய்வ வழிபாடு கூடாது. அந்த தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கூடாது.  
*புலால் உண்ணக்கூடாது.  
*சாதி,சமயம்,மதம் என்று எந்த வேறுபாடுகளும் கூடாது.  
*ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.  
*ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே 
பேரின்ப வீட்டின் திறவுகோல்.  
*புராணங்களும்,சாத்திரங்களும் வாழ்க்கைக்கு வேண்டிய முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டது.  
*இறந்தவரை புதைக்க வேண்டும். எரிக்க கூடாது.  
*கருமாதி, திதி முதலிய சடங்குகள் கூடாது.  
*எந்த காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்.

நன்றி: தினத்தந்தி

இர‌வு நேர‌த்தில் இப்ப‌டியும் ஒரு கொள்ளை!!!


ஜெனிவாவில் முடுக்கி விடப்பட்டு இருக்கும் அந்த துகள்கள் மோதி ஆய்வு முடிவுகள் வெளி வரும் வரை நாம் சற்று பொறுமை காப்போம். அதுவரை சில பொதுவான விசயங்களைப் பற்றி பார்ப்போம்.....

நேற்று இரவு சுமார் 2 மணி இருக்கும் தீடீரென்று என் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாய் ஒலி வந்தது, இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தேன். நான் பயன்படுத்தும் வோடாபோன் சேவைச் செய்தி வந்துஇருந்தது. திறந்து பார்த்தால் "தாங்கள் சந்தோஸ் சுப்பரமணியத்தில் இருந்து பாடல் ஒன்றை உங்களின் அழைப்பவர் கேட்க்கும் பாடலாக தேர்வு செய்தமைக்கு நன்றி." என்று சொல்லி 35 ரூபாயை கழித்து இருந்தார்கள்.

நடு இரவில் வந்ததே எனக்கு கோபம். உடனடியாக வோடபோன் நுகர்வோர் சேவைக்கு அழைத்து கேட்டால்,5 நிமிடத்திற்கு முன் எனக்கு ஒரு தானியங்கி சேவை அழைப்பு வந்ததாகவும் அதன் மூலமாக‌ நான் தான் அந்த பாடலை தேர்ந்தெடுத்தாக கூறி சாதித்தே விட்டனர். ஆனால் அப்படி எந்த அழைப்பும் எனக்கு வரவே இல்லை.

இதற்கு எல்லாம் என்ன காரணம் தேவை இல்லாமல் வரும் சேவை அழைப்புகள் என் கண்டு கொண்டு அப்பொழுதே எனது எண்ணை START DND என குறுந்தகவல் ஒன்றை அவர்கள் கூறிய எண்ணுக்கு அனுப்பி வைத்தேன். இன்னும் 45 நாட்களில் இது போன்ற சேவை அழைப்புகள் வருவது முற்றிலும் நின்று போகும் என தகவல் வந்தது. இருந்தும் 35 ரூபாய் வீணாய் போனதே...

ஆகவே நண்பர்களே! தாங்களும் தங்கள் எண்களை Dont Disturb பட்டியலில் இணைத்து விட்டீர்கள் என்றால் தாங்களும் இது போன்ற தானியங்கு அழைப்புகளில் இருந்தும் வங்கிகளில் இருந்து வரும் கடன் அட்டை அழைப்புகளி இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். இணையம் வழியாகவும் தொந்தரவு செய்யாதே பட்டியலில் நமது எண்ணை இணைக்க அரசு இணையதளம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது.

இதோ அத‌ற்கான சுட்டி http://www.donotdisturb.in/

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...