விஷ்ணுபுரம்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்!!!
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு!

           நான் உங்களை இதற்கு முன் வாசித்தது இல்லை. சித்தர்கள் பற்றி எப்போதும் போல அன்றும் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது உங்கள் ரசவாதம் பற்றிய சிறுகதைக்கு இட்டுச் சென்றது Google. அதுதான் நான் வாசித்த உங்களது முதல் எழுத்துகள். படித்தபின் நினைத்தேன் இவரை எப்படி இத்தனை நாள் தவறவிட்டேன் என்று....

          உடனே உங்களது புத்தகங்கள் இனையத்தில் எங்கு கிடைக்கும் என்று Google இடம் கேட்டேன் அது உடுமலை.காம் க்கு என்னை கூட்டிச்சென்றது.

          பார்த்தவுடன் என்னை கவர்ந்தது விஷ்ணுபுரம். 20 நாட்களுக்கு முன் உடுமலை.காம் லிருந்து விஷ்ணுபுரம் தருவித்து படிக்கத்துவங்கினேன். எனக்கு பிடித்த எழுத்துகள் என்று வரிசைப்படுத்தினால் அதில் அமரர் கல்கிக்கே முதலிடம். பல தளங்களில் ஒரே நேரத்தில் பயணிக்கும் நீங்கள் கல்கியை தண்டித்தான் போகிறீர் சிற்சில இடங்களில்.

          விஷ்ணுபுரத்தின் கதையை ஒரு 100 பக்கங்களில் அடைத்திட முடியும், ஆனால் இதில் நிறைந்திருக்கும் தத்துவ விசாரணைகளை எப்படி உங்களால் 800 பக்கங்களுக்குள் அடக்க முடிந்தது என்று நினைக்கும்போது வியப்பாய்தானிருக்கிறது.

          உண்மையை சொல்கிறேன் ஜெமோ அவர்களே ! விஷ்ணுபுரம் படிக்கத்துவங்கிய 2 ம் நாளிலிருந்து என் தூக்கம் எனக்கு வித்த்யாசமாய் பட்டது. என்னுள் பல காலமாய் சுழன்று அடிக்கும் பல கேள்விகளில் சிலவற்றிற்கு விஷ்ணுபுரம் விடைதருகிறது. பல கேள்விகளுக்கு, எரியும் நெருப்பிற்கு நெய்யாய் இருக்கிறது.

          உங்கள் விஷ்ணுபுரம் ஒரு வேள்வி. கேள்விகளை அவியாக்கினால் பதில்கள் வரமாக. ஆனால் எல்லா கேள்விகளும் விடையறுக்கபடுவதில்லை.......................


          ஸ்ரீபாதத்தில் வரும் வர்ணனைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வியப்பாய் இருக்கிறது. உங்களது எழுத்துகள் அந்த கற்பனை நகரை கண்முன்னே கொணர்கிறது.

          விஷ்ணுபுரத்தின் முன்று பாகங்களும் அருமை. எனக்கு மிகவும் பிடித்தது, மீண்டும் மீண்டும் படிப்பது இரண்டாம் பாகம் கெளஸ்துபம்...

          என்னை கவர்ந்த , என்னை பாதித்த சில பகுதிகள்,

          பிங்கலனிடம் மகாபிரபு கூறுவார்,” உன்னை மீட்கும் வழி பற்றி சிந்தித்தேன் . உன்னை கூட்டிவர தாசித்தெருவிற்கு கூட வரத்திட்டமிட்டேன். ஆனால் அன்றிரவு தூக்கமற்று புரண்டு படுத்தபடி இருளுக்குள் நானும் எனது ஆத்மாவும் தனியே இருக்கும் போது அறிந்தேன்- என் மனம் ஏங்குவதை. சென்றுபோன என் இளமையை, இழந்த இன்பங்களை, இனி மீளமுடியாத அந்த உலகை...... ”இன்றைய சாமியார்கள், ஆன்மீகவாதிகளின் நிலையை நியாபகபடுத்தும் வரிகள்...

          “நாம் பார்க்கிறோம், பார்க்கும் கணத்திற்கும் அப்பொருளை பார்வை தொட்ட கணத்திற்கும் இடையே ஒரு கால இடைவெளி உள்ளது. அது மிகமிகச் சிறியதாக இருக்கலாம். ஆயினும் அவ்விடைவெளியில் அப்பொருள் அழிந்து இன்னொன்று பிறந்திருக்கும்.........”


          “புயலடிக்கும் நள்ளிரவில், மின்னலொன்று காட்டிய காடு போன்றது பிரபஞ்சக் காட்சி. அக்காட்சியை வைத்து காட்டை அனுமானிப்பதே பிழையானது. அக்காட்சி நம் கண்களை அடைந்த கணம், ஒரு நூறு மரங்கள் சரிந்திருக்கும். அடுத்த மின்னல் நமக்கு காட்டுவது வேறு காடு........ ”


          “அறிய முடியாத ஏகம் என்று வேதம் கூறுகிறதே அது என்ன ? .... அறிய முடியாத ஏகம் என்ற சொல்லே முரண்பட்டது. அறிதலில் இருந்ததல்லவா ஏகம் என்ற எண்ணம் வர முடியும்...”
அஜிதனின் இந்த பதில் எனக்குள்ளேயே என்னை கைதட்ட வைத்தது.


          “வேதங்களை கண்டறிந்த ஆதி ரிஷிகள் அவற்றை ஏன் பெருவளியிலேயே விட்டுச்செல்லவில்லை....” என்ற கேள்வியும் அதை தொடர்ந்து நிகழும் தர்க்கமும் அதில் கிடைக்கும் விடையும் சவுக்கை சுழற்றும், ஒரு உணர்வு.

          “கற்பவன் கடந்து செல்ல முடியாத நூல் எதுவுமில்லை. அது வேதங்களுக்கும் பொருந்தும்”

          “இறக்கும் உடலில் இருந்து ஆன்மா எங்கு செல்கிறது?.... விறகில் நெருப்பு எரிகிறது, விறகில்லையேல் நெருப்பு இல்லை. விறகு எரிந்து முடிந்து விட்டால் நெருப்பு முற்றிலும் அணைந்துவிடுகிறது. எவராவது விறகில் எரிந்த நெருப்பு விலகிச்சென்று விட்டது, காற்று வெளியில் அது உள்ளது என்று கூற முடியுமா?.......”

          இப்படி நிறைய இருக்கு சார்.......


          நிச்சயம் சொல்வேன் தமிழ் இலக்கியம் உள்ளவரை விஷ்ணுபுரம் இருக்கும்.

          ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒன்று. இல்லை இல்லை ஒவ்வொருவரும் படித்திருக்க வேண்டிய ஒன்று....

          சிந்திக்கப்படாத ஆனால் சிந்திக்க பட வேண்டியவை நிறைய நிரம்பியது விஷ்ணுபுரம்.

          மொத்தத்தில் நிலவின் மறுபுறம் உங்கள் விஷ்ணுபுரம்.

எழுத்தாளர் ஜெமோ அவர்களின் வலைதளம் செல்ல இங்கே சொடுக்கவும்.
*************************************************************************************

சிந்திக்க :

          மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

                                        - இயன்லா வன்சான்ற்.
*************************************************************************************
ரசிக்க:

          "மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்....
மேலும் தகவல்களுக்கும் மென்புத்தகங்களுக்கும் இங்கே செல்லவும்.
*************************************************************************************அடுத்த பதிவு
ஜெயமோகனது விஷ்ணுபுரம் எனது பார்வையில்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...