வெள்ளியங்கிரி பயணம்


          09/09/2011. அந்த அழகிய நாளின் அதிகாலை 4.30 மணியளவில் நானும் எனது நண்பர் திரு. கேபிள் சுரேஷ் ம் பஜாஜ் பல்சர் ல் 500 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து கிளம்பினோம். அங்கிருந்து சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், சரவணம்பட்டி வழியாக கோவையை அடைந்தோம். அங்கிருந்து பூண்டி மலையடிவாரத்தை காலை 7.30 மணியளவில் சென்று அடைந்தோம். ஒரு உணவகத்தில் ஊத்தாப்பத்தை சாப்பிட்டு விட்டு, அடிவாரக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மலையேறத் தொடங்கினோம். இது சீசன் இல்லாத காரணத்தினால், எங்களுக்கு மலையேற உதவியாக இருக்கும் மூங்கில் தடியினை தர மறுத்து விட்டனர் கோயில் நிர்வாகத்தினர்.

          ஆனால், போகும் வழியிலேயே இரண்டு மூங்கில் குச்சிகள் எங்களுக்கு உதவத் தயாராக இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு 8.30 மணிக்கு மலையினை ஏறத் தொடங்கினோம்.
           சுமார் 2500 படிக்கட்டுகளை கடந்த பின், 9.45 மணியளவில், முதல் மலையின் உச்சியினை அடைந்தோம்.வெள்ளை விநாயகர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, ஏறத் தொடங்கினோம். அதன் பின் மலைப் பாதையில் படிக்கட்டுகள் இல்லை. சறுக்கலான, மண் பாதையில் தொடர்ந்து ஏறினோம்.
          அந்த மலைக் காட்டின் அழகையும், அமைதியையும் ரசித்து விட்டு, தொடர்ந்து இரண்டாபது மலையின் உச்சியினை நோக்கி நடந்தோம். உடல் சக்தியினை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தோம். 11.00 மணியளவில் இரண்டாவது மலையுச்சியை அடைந்தோம். சிறிது நேர ஓய்வுக்குப் பின், மதியம் 12.30 மணியளவில் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு, பயணத்தை தொடர்ந்தோம். 1.50 மணியளவில் மூன்றாவது மலையின் உச்சியினை அடைந்தோம். இதமான சாரல் மழை எங்களை வரவேற்க்க காத்திருந்தது.
          தொடர்ந்து பயணித்தோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான காட்டு மரங்கள் மனதைக் கவர்ந்தன. சுமார் 2.50 மணிக்கு நான்காம் மலையின் உச்சியினை அடைந்தோம். கண்ணில் பட்ட காட்டெருமையை பயத்துடன் ரசித்து விட்டு வழுக்கலான, சறுக்கும் பாதையில், முயர்ச்சித்து மூங்கில் குச்சின் உதவியோடு ஏறினோம்.
          3.10 மணியளவில் ஐந்தாவது மலையின் உச்சியை அடைந்தோம். மேகங்கள் தொட்டு செல்லும் அந்த இதமான அனுபவம் மறக்க முடியாத ஒன்று. மேகங்களோடு பயணித்து ஆறாம் மலையை சுமார் 3.50 மணிக்கு அடைந்தோம்.


          ஆகாய லிங்கத்தை தரிசிக்க இன்னும் ஒரு மலை ஏற வேண்டும். தொடர்ந்து பயணித்தோம். மாலை 4.30 மணியளவில் ஏழாவது மலையின் உச்சியை அடைந்தோம். மேகங்கள் கண்களை மறைத்தன.
          அந்த அழகிய, அமைதியான உச்சியில், சிறு குகைக்குள்ளே அமைந்திருக்கும் கோயிலில் சிறிது நேரம் தியானித்தோம். அழகிய அந்த இடத்தை விட்டு புறப்பட தயாரானோம். அப்போதே இருளத் தொடங்கி விட்டது. மழையும், இருளும் கை கோர்த்திருந்தன.

          வேகமாக இறங்கத் தொடங்கினோம். இறங்குவது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. இரவு சுமார் 8.30 மணிக்கு அடிவாரத்தை அடைந்து, ஒரு அழகிய அனுபவத்தின் நினைவுகளுடன் வீட்டுக்கு புறப்பட்டோம். பயணம் இனிதாக முடிந்தது, லேசான கால் வலியுடன்... :-)


*****************************************************************************
இந் நேரத்தில் ஒரு திரைப்படப் பாடலை பகிர விரும்புகிறேன்.

*******************************************************************************


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...